சாதனைகள்

800 மீட்டர் ஓட்டத்தில் சாதனை

280 views

800 மீட்டர் ஓட்டத்தில் சாதனை! – தங்கம் வென்ற தமிழக வீரருக்கு குவியும் பாராட்டுகள்

மதுரை ரேஸ்கோர்ஸ் திடலில் பயிற்சி பெற்றுவரும் மாதேஷ் என்ற மாணவன் தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்றதற்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

தேனி மாவட்டம் வடுகபட்டி பகுதியைச் சேர்ந்த மாதேஷ் மதுரை ஏ.சி மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவருகிறார். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பயிற்சி பெற்றுவருகிறார். இந்த நிலையில், தேசிய அளவில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பிரிவில் சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார். இதனால் இவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

இது குறித்து பயிற்சியாளர் கண்ணன் கூறுகையில், மாதேஷ் கடந்த 3 வருடங்களாக மதுரையில் எஸ்.டி.ஏ-வின் கீழ் பயிற்சி எடுத்து வருகிறார். விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த மாதேஷ். மதுரையில் நடைபெற்ற குடியரசு தினவிழா விளையாட்டுப் போட்டியில் 800.மீ, 1500.மீ ஓட்டப் போட்டியில் பங்கேற்று புதிய ரெக்கார்டை பதித்தார். அதனால் மாதேஷுக்கு அதிக அளவு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது டெல்லியில் நடைபெற்ற 800.மீ போட்டியில் முதல் இடமும், 1500.மீ போட்டியில் 2வது இடமும் பிடித்தார். 800 மீ ஓட்டப் போட்டியில் 1 நிமிடம், 53 விநாடி, 86 மைக்ரோ நொடிகளில் பந்தய இலக்கை எட்டி ரெக்கார்டை பதித்துள்ளார்.

இதனால் இவருக்கு விளையாட்டுத் துறையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். அடுத்த மாதம் பிப்ரவரி 17-ம் தேதி ராய்பூரில் நடைபெற உள்ள ஏசியன் கேம்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளார் எனவும் தெரிவித்தார்.

மாதேஷ் மற்றும் அவரது பெற்றோர்களுக்கு பசுமை வடுகையின் சார்பில்  வாழ்த்துக்கள் !!!

Leave a Response