இரட்டை ஆலமர ஊருணி தூர்வாரும் பணி
பசுமை வடுகை மற்றும் வடுகபட்டி பேரூராட்சி இணைந்து இன்று காலை ஒன்பது மணி அளவில் வடுகபட்டியில் உள்ள இரட்டை ஆலமர ஊருணி தூர்வாரும் பணி துவங்கப்பட்டது.
இந்த ஊருணி பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பகுதியின் உடைய நிலச்சுவான்தார்கள் மூலமாக தானமாக வழங்கப்பட்டு ஒரு நல்ல நீர் ஆதாரமாக விளங்கியது . இதனுடைய சர்வே எண் 1004 / 1 , பரப்பளவு சுமார் 2 ஏக்கர்.
இந்த நீர் ஆதாரம் கடந்த 40 ஆண்டுகளாக கரைகள் இல்லாமல் தூர்வாரப்படாமல் கவனிப்பாரின்றி கிடந்தது இந்த ஊரணியை வடுகபட்டி பசுமை அறக்கட்டளை மற்றும் வடுகபட்டி பேருராட்சி முயற்சியால்ஆகஸ்ட் மாதம் சர்வே செய்யப்பட்டது, அதைத்தொடர்ந்து இன்று காலை பெரியகுளம் கோட்டாட்சியர் செல்வி. C. ஜெயப்பிரிதா அவர்கள் மற்றும் திரு எஸ் சின்னச்சாமி எட்டு பட்டறை தலைவர் தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார்கள். இதற்கு பசுமை வடுகையின் நிறுவனர் மருத்துவர் திரு செல்வராஜ் அவர்கள் தலைமை, மற்றும் வடுகபட்டி பேரூராட்சியின் செயல் அலுவலர் எஸ் கணேஷ் முன்னிலை வகித்தனர்.
இந்த பணியானது பத்து நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். ஊருணி கரைகளை பலப்படுத்தவும், உள்பகுதியில் உள்ள மணல் மேடுகளை அகற்றி சரி செய்யப்படும். இதன் மூலம் வரும் மழை காலத்தில் நீர் நன்கு தேங்கும், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு குடிப்பதற்கு தண்ணீரும் அருகில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணற்றடி நீர்மட்டம் உயரும்.
பசுமை வடுகை அறக்கட்டளை நிர்வாகிகளும் வடுகபட்டி பேரூராட்சி அலுவலர்களும் ஊருணி தூர்வாரும் நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.
நன்றி: தினமணி நாளிதழ்